நிலம் காப்பாள் நித்யகல்யாணி
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கிறாள் நித்ய கல்யாணி அம்மன். செங்கோட்டை, கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது திருவிதாங்கூர் மன்னர் குற்றாலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார். அவ்வாறு வந்துவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே இலத்தூரில் உள்ள மதுநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வார். ஒருமுறை இலத்தூருக்கு சென்று கொண்டிருக்கும்போது கானகத்தின் நடுவே உள்ள பாதையில் மூங்கில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதியில் வந்ததும் மன்னரின் வண்டி நின்றுவிட்டது. சாரதி எவ்வளவோ முயன்றும் குதிரைகள் நகரவே இல்லை. அப்போது அடர்த்தியாக நின்ற மூங்கில் மரக்காட்டில் இருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர். தனது சேவகர்களை உடனே அந்த மூங்கில்களை வெட்டி அகற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது அங்கிருந்து பெண் குரல் வந்தது. ‘‘மன்னா, நான் குலசேகரநாதரின் மனைவி தனது பெயர் நித்ய கல்யாணி. அசைவ உணவை உண்ண ஆசைப்பட்டு வைராவி இனத்தார் வீடு சென்று உண்டு விட்டேன். அதற்கு தண்டனையாக எனது கணவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். ...